July 01, 2010

சனிக்கிழமை இரவுகள்

சனிக்கிழமை இரவுகள் சுவாரசியமானவை. வாரத்துவக்கத்திற்கான படபடப்பு முன்னோட்டம் ஞாயிறு போல் சனியிரவில் இருப்பதில்லை. மூச்சிரைத்தோடும் வருடத்தின் வாரங்களெல்லாம் சனிக்கிழமை இரவுகளில் சாவகாசமாய் இளைப்பாறும். தேக அயர்ச்சியும் உள்ளத்துளைச்சலும் சனி இரவின் தோள்களில் தாராளமாய் இறக்கிவைக்கப்படுகின்றன. சனிக்கிழமை இரவென்பது தோழமை. ஒரு வாரத்திற்கு தேவையான அன்பு சனியிரவுகளில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டுவிடுகிறது. நேசிப்பிற்குரியவர்க்கான பாசத்தையும் நேரத்தையும் ஒதுக்கமுடியாத குடும்பஸ்த்தர்க்கு சனிக்கிழமை இரவென்பது பகிர்வுவெளி.

தனித்திருப்பவனுக்கு எல்லா இரவுகளுமே விசேஷமானவை . இரவு என்பது அவனுக்கு தேவதையின் ஆசிர்வாதம். கருஞ்சிறகுகளில் சுமந்தபடியே இரவுதேவதை தனது அந்தரங்க அற்புதங்களை அவனுக்கு தினந்தோறும் ஆசிர்வாதம் செய்துவிடுகிறாள். கோலாகலமாகவே துவங்குகின்றது ஒரு மாநகரத்தின் இரவு. ஒரு குழந்தை அண்ணாந்து வாய் பிளப்பதற்கான மாயாஜாலங்களை அது வாரியிறைத்து விடுகிறது. இங்கே இரவு எனப்படுவது சூரியன் இல்லாத வெளிச்சம். ஒற்றைக்கால் ரெட்டைக்கண்களோடு பயமுறுத்தும் அரக்கனாய் நெடிதுயர்ந்த சோடியம் விளக்குகளும் பரபரப்பு குறையாத சாலைகளும் மாநகரின் ராத்திரிகளை விடிய விடிய விழித்திருக்க வைத்துவிடுகின்றன.

எதையோ துரத்தியபடிதான் விரைகின்றன எல்லா வாகனங்களும். அசுரவேக வாகனங்களெல்லாம் விலங்குகளை ஒத்தே இருக்கின்றன.ஒரு மலைப்பாம்பென ஊர்ந்து வருகிறது பாலத்தின் மேல் பறக்கும் ரயில். ஒற்றைக்கண் மட்டுமே கொண்ட காட்டுவண்டென பறக்கின்றன இரு சக்கர வண்டிகள். முன்பக்கம் மூக்குபோல் புடைத்த ஆட்டோ ஓணாயென ஓடி வருகுது . சிங்கமோ புலியோஎன பீதிகிளப்புகிறது லாரி. சற்றே நீளமான கார்கள் காட்டெருமைகள் போலவே வருகின்றன. ஒடிசலான தேகமுடய சைக்கிள் மட்டும் சாதுவான எறும்புபோல ஊர்ந்து வருகிறது. முட்டைக்கண்ணும் பரட்டைத்தலையும் மயிர் மழிக்காத முகமுமாய் அந்த சைக்கிளோட்டிதான் எரும்புமேல் எமனாய் பயமுறுத்துகின்றான்.

நாம் வடிவமைத்த வாகனங்கள் எல்லாம் விலங்கினங்களையே நினைவூட்டுகின்றன. முதுகுத்தண்டு நிமிர்ந்து வாலுதிர்த்து வெகு தொலைவு கடந்து வந்திருந்தாலும் மனிதனின் ஞாபகக் கண்ணாடி எங்கும் விலங்கின் பிம்பங்கள். முற்றிலுமாய் மிருகத்தின் அடையாளங்களை மனிதன் துடைத்தெறிவது எக்காலம்? விலங்கின் எச்சங்கள் எல்லாம் களைந்த மனிதன் என்னவாயிருப்பான்? கடவுள் எனச்சொல்லப்பட்டது மனிதனின் அடுத்த பரிணாமமா அல்லது ஞானமுற்றவரின் அனுபவமாய் அறியப்பட்டது போல் உயிருற்பத்தி ஆகும் ஊற்றுக்கண்ணா?

தடம் புரண்ட சிந்தனைகள் விடைகாணா முற்றுச்சுவரின் மீது முட்டிக்கொண்டு நின்றதில் தலைகனத்து புரண்டுபடுத்தேன். என் படுக்கையருகே என்னைப் போலவே ஒரு கரிய உருவம் உருண்டது; விக்கித்து விழித்தேன். என்னிழல்தான் என ஆறறிவு உறுத்தியபோதும் இருதயத்தின் படபடப்பு இன்னமும் குறைந்தபாடில்லை.

மண் துகள்களோடு சிகரெட் சாம்பல்
கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள்
பகலில் திருடன் நுழைந்திருப்பனோ? 


கதவு வழியாய் நுழைந்த காற்றில்
ஈரப்பசையோடு தாவர வாசனை.
கோடை மழை பெய்திருக்கக்கூடும். 

எங்கே? எப்போது? 

ஜன்னலுக்கு வெளியே-
வேட்டைக்கு செல்லும் வேகத்தில் வாகனங்கள்.
ஒன்றிரெண்டு இரையாகவும் நேரலாம்.

நாட்டு மரங்களை பிடுங்கி
நடப்பட்ட அலங்காரச் செடிகளுக்கு
கோடையிலும் சிரத்தையோடு நீர் பாய்ச்சும்
கார்பரேஷன் லாரி.

பின்னிரவின் பறக்கும் ரயிலில்
காலியாகவே இருக்கின்றன
பெரும்பான்மையான இருக்கைகள். 


இருளின் வெளிச்சமின்மையும் மீறி பளீரென்றிருந்தது
அவளின் முகமும் புன்னகையும். 


இளஞ்சூட்டில் தேநீர் குடித்தால் நன்றாய்த்தானிருக்கும். 

கட்டாய கடமைகள் ஏதும் நாளைக்கில்லை.
சற்று நீளமாகவே கழிகின்றது சனிக்கிழமை பின்னிரவு.