July 20, 2010

உள் கட

பூட்டிக் கிடக்கும் மனதைத் திறந்துவிடுவதற்கான சாவியை வைத்திருக்கின்றன சில கணங்கள். நேசம் பரிமாறிக்கொள்ளும் நேரங்கள், லயித்துக்கிடக்கும் இசை, இன்ன பிற இடங்களில் ஒரு மர்மக் கதவு தட்டப்பட்டுவிடுகிறது.

......சுவாசம் கவனிக்கப்பட்டு
.........சுவாசங்கள் குறைந்து
...........சுவாசத்தில் கரைந்து
.............உள்ளே பொருந்தி
...............உள்ளே கிடந்து
...................உள் கடந்து
.........வெளியெங்கும் விரவி
யாதும் நானாய், நானே யாவுமாய்

அமிழ்ந்து கிடக்கையில், சட்டெனக் கலைந்து, நழுவிய இடத்திற்கே திரும்ப வந்து விழுகையில், பித்துக்குளி போலும் உறைந்து கிடந்ததாய் தோன்றும் அந்த கணங்களுக்கு என்னவென்று பெயரிடுவது - தேவகணங்கள் என்பதைத் தவிர.

இரயில் கதவின் இருபுறக் கதவுகளை
இறுகப் பற்றியபடி
படியோரம் நின்று பயணித்திருந்தேன்.

நழுவியோடிய இருட்டுப் பள்ளத்தில்
பெரும்புதிருக்கான தீர்வொன்று பொதிந்திருப்பதாய்
ஈரக்காற்று முகத்தில் அறைந்து அழைத்ததில்
குதித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.