July 23, 2010

காதல் அந்தாதி



ஈரத் துணிகள் காய வைக்கையில்
ஓரப்பார்வை காதல் சேதி சொல்லும்
மாத மொருமுறை துவைக்கின்ற பாய்
மாத விலக்கான தேதி சொல்லும்.

கீச்சுக் குரல் காதைக் கிழிக்கையில்
என்பைக் காற்றில் எட்டு போடும்
உன் அம்மாவைப் பார்த்த மறுகணம்
டயரில் காற்று போகும்.

எட்டிப் பார்க்கும் எட்ட பார்வையோ
கிடுக்கி போடும் கிட்ட பார்வையோ
குழப்புதடி கடைப்பார்வை.
தாண்டிச் செல்லும் வேளைகளில் - குழி
தோண்டிக் கொல்லும் விழிகளில்
இருக்குதடி கடப்பாரை.

தினந்தோறும் ஜன்னல் தரிசனம்
என்மேல் நீ கொண்ட கரிசனம்
என்ன வகுப்பினர் உன் சாதிசனம்
முதலியார் என்றால் ஆறும் காதல்மனம்.

சிகரெட் பிடிப்பதை சீக்ரெட்டாய் பார்த்ததில்
இழுத்த புகை புரையேறிப் போச்சு
கடைக்கண் பார்வையா? கடை சிகரெட்டா?
ITC மானம் கப்பலேறிப் போச்சு.

ஏரிக்கரை தெருப்புழுதி கூட்டத்திலும்
கொலுசுச் சத்தம் தெளிவாய்க் கேட்கும்
என்னை உன்னை சேர்த்து வைத்தால்
குறைஞ்சா போகும் ஆதம்பாக்கம்?

உன்னைக் கண்டபின்னால்
ஏதேன் தோட்டம் ஆனதடி
ஆதம்பாக்கம்.
உன்னண்ணனின் பைக் சத்தம்
காதல் பார்வைகளுக்கு
atombomb வைக்கும்.

பாத்திரம் உருட்டும் சத்தம் கொண்டே
சமைப்பது நீயென அறிந்துகொள்வேன்.
தூரத்தில் புள்ளியாய் தெரிந்தாலும்
வருவது நீயென தெரிந்துகொள்வேன்.

படகு போல் என் நெஞ்சு
துடுப்பு இன்றி தத்தளிக்குதே
கடுகு போல் என் மனசை
அடுப்பில் போட்டு தாளிப்பதேன்?

கறுப்பில் கடைந்தெடுத்த தேவதையே மனம்
பொறுப்பில் லாமல் சுற்றுவதேன்?
இருப்பு கொள்ள முடியலையே! உன்னை
இறுக்கி அணைக்க நினைக்கையிலே!

என்னோடு நீ வந்தால்
ஆதாம் ஏவாள் காலம் செல்வேன்
எவனோடோ நீ போனால்
சேது சென்ற பாதை போவேன்.

உன்னை பார்க்காமல் படிக்க முடியவில்லை
பார்த்து விட்டாலும் படிக்க முடியவில்லை
பார்வைகள் எதில் முடியும் தெரியவில்லை
படிப்பு என்ன ஆகும் புரியவில்லை.