July 23, 2010

நரை காதல்



ஆர்ப்பாட்டம் அடங்கி ஆரவாரம் குறையும்
நரை கூடி கிழப்பருவம் எய்தி
தானும் ஆட தசையும் ஆடும்;
நின்ற வேளையில் ஊன்றுகோல் நீ!

உடல் கூனினும் உலக அழகி
ஊருக் குரைக்க உரக்க கத்துவேன்
நடுங்கிய கைகள் காது தேடும்
வயதாகா நாணம் முகம் மூடும்.

பொக்கை வாய்; மழலை பேசுவாய்
தாயு மாவேன்; மடியில்நீ சிசுவாய்.
அமாவாசை வானமே ! நிலவு தேடாய்
பௌர்ணமி கொண்டேன் மடியில் பாராய்!

கனக்கும் இதயம் கண்ணீர் சிந்துவாய்
பார்வை அற்றவன் பாழுங் கிழவன்
எச்சில் ஈரமென பொய் சொல்குவாய்
உமிழ்நீரில் உப்பு மூட்டை ஏற்றுவாய்.

உனதா? எனதா? எவர்காதல் பெரிது?
சண்டை இடுவோம்; என்மரணம் தாங்காய்
நிறுத்தி வைப்பேன் என் சாவை
மரணத்தில் ஜெயிப்பாய்; காதலில் ஜெயிப்பேன்.

நரை கண்டும் குறையாக் காதல்
நிறைகுண சதியே இறை அவதாரம்
காதல்- கடவுள் நம்பிக்கை கொள்வேன்
சாகும் முன்னரே சொர்க்கம் காண்பேன் .