July 08, 2010

படிப்பிதம்

அழுத்திப் பூசிய அழுக்கும், பராமரிப்பில்லாத சரீரமாய் இவர்களைப்  பார்த்திருக்கிறேன் . பொதுவான இடங்களில், பிரத்யேகமான உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள். பிரபஞ்சப் பெரும்புதிரை விடுவிக்கும் தீவிர சிந்தனையோடு வெறித்துப் பார்த்தபடியும், எள்ளி நகையாட ஒரு பெருங்கோமாளிஎன உலகத்தைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தபடியும் பார்வையில் பதியும் இவர்கள், மக்கள் தொகையில் விடுபட்ட எண்ணிக்கைகளோ . விதிஎனத் தீர்மானிக்கப்பட்ட கணத்தில் கவனந்தவறி, தடுக்கி விழுந்தவர்களோ ; விழுந்த பின் எழமுடியாமல் நின்றுவிட்டவர்களோ.

இடறுவதர்க்கென்றே, பாதையெங்கும் கற்களை இறைத்திருக்கிறதோ வாழ்க்கை. சில பிழைகளில், சில கவனப்பிறழ்வுகளில் நிகழும் சில தடுமாற்றங்கள் சிலரை உருமாற்றி, இடமாற்றிவிடுகின்றன. பெரும்பானோர், இதை கடந்து போய் விடுகின்றனர்; வாழ்க்கை, சிலரை கடந்து போய்விடுகிறது. நிலைகுழைந்தவர்களின் பிரதிநிதிகளாய், இவர்கள் வாழ்க்கை மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்; உலகமே இவர்களை வேடிக்கை பார்த்தபடியும், இவர்கள் உலகத்தை வேடிக்கை பார்த்தபடியும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த தடுமாற்றத்தை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள் என்றேபடுகிறது. எப்போதது? எவரவர்? என்பதுதான் ஆருடத்தின் அனுமானமாய் இருக்கிறதோ. மிகுகண்டிதமான ஒரு ஆசிரியரைப்போல் வாழ்க்கை எல்லோருடைய தலையிலும் குட்டியபடிதான் தனது படிப்பிதத்தை புகட்டிச்செல்கிறது; கீழ்ப்படிதலில்லாத குறும்புக் குழந்தைகளாகவே எல்லோரும் வளர்ந்திருப்பதால்.


பெரியதாய் காரணங்களேதும்
அவசியப்படுவதில்லை.

ஏதேனுமொரு காலகட்டத்தில்
எல்லோருக்கும்தான் ஏற்பட்டுவிடுகிறது
மனப் பிறழ்வு .

பிரபஞ்சப் பேரேட்டில் புரிவதற்கில்லை
சில கணக்கு வழக்குகள்.