August 15, 2010

காற்றிசைச்சரம்

காற்றிலசையும் WIND CHIMES ஒரு காட்சிக்கவிதை; பலகோடிக் காவியம். ரசனை ஒதுக்கி, ராசாயனத்தை ஆராய்ந்தால்-
CHIMES என்ற வார்த்தை " A RINGING SOUND, ESPECIALLY, ONE THAT IS MADE BY A BELL" என்று NOUN ஆகவும், "TO RING " என்று VERB ஆகவும் பயன்பாட்டில் உள்ளது.

இங்கிலீஷின் இலக்கண நுணுக்கங்களுக்கு இணையான தமிழ்ப்பதம், தர வேண்டி ஈரமிகு வேணுவிடமும், அறமிகு. ஞாநீயிடமும் விண்ணப்பிக்கப்பட்டது. காற்றிசைமணி, காற்றசைமணி, வளியிசைமணி என்று வேணு வார்த்தைகளை வாரியிறைத்தான். WIND CHIMES தரும் காட்சிக்கிறக்கத்தை, தொங்குமணிச்சரம் என்று தங்குதடையின்றி, எழுத்துக்களில் இறக்கிவைத்தார் ஞாநீ. கனவுகளில் கால்பதித்த வைரமுத்துவிடமும் வினவல் வைக்கப்பட்டது. பதப்பசி அடங்குவதாயில்லை.

பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் மீட்கப்படும் இசையை CHIMESக்கு இணையாக்கலாம் என்று வேணுவிடம் கலந்தாலோசித்துவிட்டு, தனியாய் தேநீர் தேடித்திரிகையில், குறுஞ்செய்தியில் வந்திறங்கியது வேணுவின் "வளியிசைச்சரம்". இதயத்திற்கு நெருக்கமாய் இருந்தபோதிலும், உற்றுப்பார்த்ததில், இசைக்கு உறுத்தலாய்க்கேட்க, வளியிசைச்சரத்தின் உரம்பெற்று உருவானது "காற்றிசைச்சரம்".காற்றிசை சரம்... காற்றிசைக்கும் சரம் என்று இலக்கணத்தோடு இணக்கமாகவும், இதயத்தோடு இன்னும் இறுக்கமாகவும் இணைந்துகொண்டது.

"வார்த்தைக்குள் கட்டுண்டு கிடக்குது
கவிஞனின் வாழ்க்கை.

வார்த்தை கிட்டின் பேறு
விட்டுவிடின் வீடுபேறு. "

என்று சிணுங்கிச் சிரிக்கிறது, சாளரச் சட்டத்தில் தொங்கியபடி, வார்த்தை விளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்
எங்கள் காற்றிசைச்சரம்.

( AUGUST 15 நள்ளிரவு 1 .15 மணியளவில் வார்த்தை வேட்கை விடுதலை கண்டது.)