November 10, 2014

கருப்பு நிறத்திற்கு காக்கையின் குரல்

இமைகள் மூடினால்
இருளின் ஆழம்
ஆழத்து நிறத்தில்
தலை சாய்த்து
விழி உருட்டி
உறுத்தும் உருவம்
ஒன்று ரெண்டாகி
ரெண்டு மூன்றாகி
காவெனக் கரையும்
o
க்கா க்கா
தெருச் சாலை
எதிர்க் கரையில்
சிறகு மறந்து
தரையில் நிற்கும்
கரிய உருவம்
இளஞ் சிவப்பு
அடித் தொண்டை
தெரியக் கதறும்
க்கா க்கா
o
பள்ளிப் பொதியை
முதுகில் சுமக்கும்
புத்தகச் சிறுவன்
ஏடு கொண்டு
விசிறும் காற்று
சிறகு எழுப்ப
போத வில்லை
தரைப் பறவைக்கு
o
காக்கா கொத்தும்
போ போ
அண்டை வாசலில்
புழுதி பெருக்கி
சிறுவனைத் துரத்துகிறாள்
மரணம் தவிர
எல்லாம் பார்த்து
சலித்த பாட்டி
o
அபயம் கேட்ட
சுற்றம் ரெண்டு
தலைக்கு மேலே
படரும் கிளையில்
அமர்ந்து கத்தும்
க்கா க்கா
o
நிழலைப் பிரித்து
இருள் கூட்டி
குழைத்த மையில்
றெக்கை அடித்து
அலையும் மேகம்
மரம் இறங்கி
சொட்டிய துளிகள்
காற்றில் கரைய
இரு கரைகளுக்கு
இடையில் ஓடும்
கடக்க இயலா
நவ நாகரீகம்
o
கிளை விட்டு
கிளை தாவி
அருகே நீளும்
மதில் சுவரில்
குதித்த ரெண்டும்
தலை சாய்த்து
விழி உருட்டி
எனைப் பார்த்து
க்கா க்கா
o
தரைப் பறவையை
ஊறு செய்ய
கூடும் என்று
எனை விரட்ட
நெருங்கி வந்தனவோ
நுனி வளைந்த
தடித்த மூக்கு
கபாலத்தில் குறுகுறுக்க
நின்ற இடத்தில்
நகரத் தொடங்குகிறேன்
o
எதிர்க் கரையில்
நிற்கும் பறவைக்கு
இக்கரையில் நான்
ஊறு என்ன
செய்திட முடியும்
மரம் இருந்து
மதில் ஏகி
பக்கம் வந்து
உற்றுப் பார்த்தது
வேறு சேதி
எனக்குச் சொல்லவோ
o
எழுந்த ஐயம்
நூல் கோர்த்து
நெஞ்சைத் துழாவ
இமைகள் மூடினால்
இருளின் ஆழம்

( நன்றி : வல்லினம் )