October 08, 2013

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது.
பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது.
துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று.
புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி
மனதைப் பிசைகிறது ஒருசோகம்.

ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில்
பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது.
புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும்.
சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை.
இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும் தூரம்தான்.
அதிகபட்சமாய் ஒருவாரத் தங்கலில் திரும்பிவிடலாம்.
பயணக்காரணம்கூட துயர நிமித்தமாய் கிடையாது.

இருந்தாலும்-

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக் கிளம்புகிறபோது
பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்திவிடுகிறது.
வாழ்ந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக் குடிபெயர்வதைப்போல-
சொந்தமண்ணைவிட்டு நிரந்தரமாய் வெளியேறுவதைப்போல-
இம்மையிலிருந்து விடைபெறுவதைப்போல-

காவியத் துயரேற்றி கண்ணீர் உகுக்கிறது மனம்.

( நன்றி : வல்லினம் )