August 23, 2013

காற்றிசைத்த குறிப்புகள்

ஒன்று

காற்றோடையில் மிதந்து வரும் மணியோசைகள்
செவியின் ஜன்னல்களை தட்டிச் செல்கின்றன.
விழித்துக் கொண்ட கண்கள்
உதிர்த்த கிளைதேடி அலைகின்றன நீர்மேல்.
உப்பரிகையில் ஒய்யாரமாய் பூத்து
குலுங்குகிறது ஓர் காற்றிசைச்சரம்.

இரண்டு

ஓயாமல் முணுமுணுக்கும் அம்மாவுக்கு
பிடிக்கவில்லை.
அதிகம் பேசாத அப்பாவும்
ரசிக்கவில்லை.
ஓசை கண்டாலே ஓடிஒளியும் தங்கை
வெறுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ரசிக்கத் தெரியாத காதுகள்
இன்று வெளியூருக்குக் கிளம்பிவிட்டன.
யாருமில்லாத வீட்டில்  துவங்குகிறது
காற்றிசைச்சரத்தின் கச்சேரி.
கேட்டு ரசிக்க திறந்தே கிடக்கின்றன
ஒருஜோடிக் காதுகள்.

மூன்று

வெறுங்காலோடு வீட்டுக்குள் நுழைந்த காற்று
கொலுசுகட்டி வெளியேறுகிறது.
அக்கம்பக்கம் காட்டி
இனி விடியும்வரை பீற்றிக்கொண்டிருக்கும்.