November 21, 2010

ஆதி அண்டமும் அரைவேக்காட்டு முட்டையும்

அடிகாணா தாழியொன்றை
வெள்ளிக்கரங்கள் கடைய
கருகருவென வெண்ணை திரண்டெழுந்த
ஒரு ஞாயிறு மதியம்.

கிளைகளை மண்ணூன்றி
வெளியில் வேர்பரப்பிய
விருட்சத்தினடியில்-

சதுரங்கத்தில்
அய்ந்தாவது முறையாக
ரோபோவை வென்ற கிளர்ச்சியில்
கள்ளருந்திக்கொண்டிருந்தேன்.

மின்னல் கதவிடுக்கு வழியே
வெளிப்பட்டு
வேர்சறுக்கி
மரமிறங்கிய கடவுள்
என்னெதிரே அமர்ந்தார்
சதுரங்கமாட.

சடுதியில் முடிந்த முதலாட்டத்தை
தொடர்ந்தாடிய ஆட்டமும்
வெகு சடுதியில் முடிய
மூன்றாவதாட்டத்தையாவது
சமன் செய்யும் சமரசத்தோடு
கள்நிரப்பி குடுவையை நீட்டினேன்.

உள்நாக்கு நீட்டித்து
உறிஞ்சிக் குடித்தவர்
கள்ளூறும் கண்களினூடே
எனைப் பார்த்தார்
குறுகுறுப்போடே.

பையா!
குஞ்சுபொரிக்கும்
முட்டையிட்டவன் நீ
கோழிகளை பிரசவிக்கும்
ஆதி அண்டம் நான்
சமர்த்தாய் தூங்கிவிட்டு
போய் வேலையைப் பார்
என்றவர்
வேர்பற்றி
வந்த வழியே திரும்பி
மறைந்தார்.

என் ராணியை
தழுவியவாறே கவிழ்ந்தபோது

கருந்திரள் வெண்ணைவழிய ஆரம்பித்தது
பெரு மழையாய்.