August 30, 2010

உயிர் மெய் எழுத்து



எழுத நானும் விழைகையில்
வார்த்தை தேடி அலைகின்றேன்.
வார்த்தை வந்து விழுகையிலே
ஓசை கூடி இரைந்ததுவே.
ஓசை ஒன்றாய் ஒலிக்கையிலே
இசையும் இனிதாய் பிறந்ததுவே.
இசையோ டிணைந்து அசையவே
உடலும் உயிரும் இசைந்ததுவே.
இசையும் உடலும் ஒன்றுகையில்
உடலும் இளகி உருகியதே.
உருகிய உடலும் தீர்ந்ததுமே
உயிரும் ஒற்றையில் நெளிந்ததுவே.
நெளிந்த உயிரும் நிலைக்கவே
வார்த்தை ஒன்றை பற்றினேன்.
பற்றிக் கொண்ட மறுகணம்
தீர்ந்த உடலும் திரும்பியதே!