ஆநிரை இரையும் ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகத் துளிபட்டு- துடியிடைமயிலும் அகவ -ஒளிகெட்டு வடிவிடை
அழகும் துயில் எழும்.
கானும் விண்ணும் தொடுமது இடத்து
மானும் மீனும் ஓடுவது குளத்து
தானும் அவனும் களித்துக் கடந்தது
கனவென நாணி கன்னியும் கிடந்தது.
முற்றிலும் துயிலை நிறைவாய்க் கலைந்து
சுற்றிலும் கொத்தாய் மலர்ந்த தொடியுள்
ஒற்றைப் பூவாய் விரிந்த செடியை
நற்றாய் நங்கை கண்டு நின்றனள்.
பச்சிளஞ் செடியை இருவரும் நட்ட
காட்சி கண்முன் விரியக் கண்டு
வஞ்சிக் கொடியும் வாடித் தளர்ந்தது;
எச்சில் உலர்ந்து பேச்சில் இழந்தது.
ஒருமையில் மலர்ந்த முதன்மைப் பூவை
வெறுமையில் உலர்ந்த மென்மைப் பாவை
தனியாய் நின்று வெறித்துக் கண்டனள்;
துணையே என்று பறித்துக் கொண்டனள்.
கிள்ளிப் பறித்து சூடியது கண்டு
தள்ளிப் பறந்த காடிடை வண்டு
நாடிச் சென்று அமர்ந்த நொடியில்
கூடிப் போனது கொடியாள் எடையே.
விளக்காய் கண்ணும் விளங்கி இருக்க
விளக்கு எண்ணை விட்டாற் போன்று
உவர்நீர் திரையும் விழியை மறைக்கும்;
உலர்நில தரையை குளமாய் நிறைக்கும்.
விண்ணில் மறைந்த விண்மீன் கூட்டம்
மண்ணில் இறங்கி குளத்தில் நீந்தும்;
காடுநிறை மானும் ஆடுநிரை தானும்
கள்ளிப் பெண்ணை துள்ளிச் சுற்றும்.
நித்திரை வந்த சொப்பனம் யாவும்
சித்திரம் போலே தப்பிலா தெழ
சொக்கத் தங்க மேனிப் பொண்ணும்
செக்கச் சிவப்பில் நாணி மின்னும்.
ஏதோ ஒன்று குறையாய் நின்று
கோள்விசை விழியாள் நால்திசை தேடியும்
கானக மயிலை காணவே இல்லை;
கனவும் முழுதாய் நனவாக வில்லை.
சோக மூட்டம் நெஞ்சில் மூள
மேக கூட்டம் பஞ்சாய் சூழ
திடுமென வந்த இடும்பை போல
வெடித்தது வாணமோ? இடித்தது வானமோ?
விறைத்த வஞ்சியும் வானம் பார்க்க
விரித்த தோகையும் கழுத்து வாகையும்
தாங்கிய மயிலொன்று தாழ்ந்து பறந்தது;
தங்கத் தலைமகனை சுமந்து வந்தது.