எழுத மனது விழைகையில்
வார்த்தை தேடி அலைந்தது.
அலைந்து திரிந்த வேளையில்
விழுந்தன கோடி வார்த்தைகள்.
வார்த்தைகள் கூடி இரைந்ததும்
ஓசை ஓங்கி ஒலித்தது.
ஒலித்தது ஒன்றாய் கேட்கையில்
இசையும் இனிதாய் பிறந்தது.
பிறந்த தோடு அசையவே
உடலும் இணங்கி இசைந்தது.
இசைந்த துமிசையும் இணையவே
உடலும் இளகி உருகியது.
உருகிய திளகித் தீர்கையில்
உயிரும் ஒற்றையில் நெளிந்தது.
நெளிந்து நிலையாய் நின்றதே
வார்த்தை ஒன்றைப் பற்றியே.
பற்றி யேங்கிக் கிடந்ததும்
தீர்ந்த உடல் திரும்பியது.
திரும்பிய தூறித் திளைக்கவே
விழைந்தது மனது எழுதவே .