தாழப் பறந்து வந்து, தொடைமேல் அமர்ந்தது கொசு ஒன்று. அசையாமல் கிடந்தேன். மயிர்ப்புதர்களில் மாட்டிக்கொள்ளாமல், கவனமாய்க் கடந்து, தோதான இடத்தில் ராஜகம்பீரத்தொடு நின்றுகொண்டது. காலச் சூறாவளியில் டினோசர்களே அடித்துச் செல்லப்பட்டபோதிலும், பறந்து பிழைத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் கில்லாடிகள்தாம். ஜீவிதச் சந்தையில் வலியன மட்டுமே விலை போகும்.
தசையில் துளையிட்டு, ஸ்ட்ராவால் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. வலி பொறுக்கமுடிவதாயில்லை. எவ்வுயிரையும் தம்முயிராய் எண்ணியவர் ராமலிங்க அடிகளார். தம் போர்வையில் இருந்த மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொன்றவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். எவ்வழி என்று குழம்பித் தெளிவதற்குள், நளபாகம் நிறைவுற்று, நிம்மதியாய் பறந்தது கொசு.
ஈதீஸ் எகிப்தி வகையறாக் கொசுக்கடித்து, டெங்கு ஜூரத்தால், தீவிர சிகிச்சைப் பிரிவில் ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் வடநாட்டு இளைஞனின் முகம், கொசுவின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. கொசுவும் தானும் ஓருயிரென ஊனுருகி உயிருருகி, விரட்டாது விருந்து வைத்திருப்பானோ? என்னைக் கடித்துச் சென்றது என்ன ஜாதி என்று தெரியவில்லை.
பறந்த பின்பும், கொசுக்கடித்த இடத்தில் அமர்ந்திருந்தது ஊசிமுனையளவு வலி. விரல்நகங்கள் பட அழுத்தித் தேய்த்தபிறகே கொசுக்கடி நினைவுகள் முற்றிலுமாய் அகன்றன.