இதுவே இறுதியாய், ஒருமுறை சிணுங்கி அடங்கியது, தரைபட்டு உடைந்து சிதறிய காற்றிசைச்சரம்.
கவனமாய் கையாண்டிருந்தால் உடைந்திருக்குமா? - கடிந்துகொண்டது மனசு.
பரவாயில்லை. பற்றிலிருந்து விடுபட இந்த இழப்பு ஏதுவாயிருக்கும்- கனிந்து, அதுவே சமாதானமும் சொல்லியது.
கவிதையாய், காதலாய் ரசித்ததை உடைத்துவிட்டாயே - சர்வாதிகாரியாய்க் குரைத்தது.
அதனாலென்ன? இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம்- காதலியாய்க் குழைந்தது.
உடலென்னும் ஓர் களத்தில், இருவேறு தளங்களில் உருமாறி, இறுகியும் உருகியும் விளையாடும் சர்வாதிகாரக் காதலியாய், மனதின் வாடிக்கைகளை வேடிக்கை பார்க்கையில், கேளிக்கையாகவே இருக்கின்றது.