October 10, 2010

ஸ்வாசத்தில் இருத்தல்

மனப் பரப்பில்
மண்துகள்களாய் விரவிக் கிடக்கிறது வெறுமை.
ஒன்றுவிடாமல் பொறுக்கி
ஒரு குடுவையில் அடைத்து
விதியின் கடலுள் வீசியெறிந்தேன்.
அலையடித்து
கரை திரும்பியது குடுவை.

வெறித்து உறுமிய வெறுமையை
மூச்சாக்கி
மூக்குவழி அனுப்பிவைத்தேன்.
சூறாவளியில் சிக்கிய மரச்சருகாய்
சுழன்றது மனம்.

சுவாசத்தை
அவதானித்து அடைகாக்கையில்
இறுகிய அங்கங்கள் இளக
சூறாவளி தணிந்து
சீராகி வளியாக
சில்லென வளைந்தாடும் மயிலிறகாய்
இயல்போடு இயைகிறது மனம்.