April 30, 2014

அஞ்சலி

ரதபதாதி சேனைகள்
விரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்

மின்சாரக் கம்பிகளைத்
தொட்டுரசும் துளிரிலை
கிளைகளுக் கடியில்

கூரியர் கவரோடு
ஜெல்பேனா 
வாங்கும்
கடை வாசலில்

ஒய்யாரமாய் நின்றுகொண்டு
அலைபேசியில் அரற்றியபடி
உதடுகளூதும் புகையை

கலைக்கிற காற்று
கொண்டு கூட்டும் 
புழுதி படிய 
தெருப்பெயர் தாங்கும்
வழிகாட்டிப் பலகையருகே

விரிகுடை நீழலில்
துடைத்து அடுக்கிய
பளப்பளா பழங்கள்
விற்கும் வண்டியொட்டி

ஈக்கள் மொய்க்க
படுத்துக் கிடக்கும்
நாயைக் கண்டு 

பிளாஸ்டிக் பெட்டிமீது
குந்தி இருக்கும்
குண்டுப் பெண்மணி
கல் பொறுக்க
முன்னால் குனிகையில்

அவள் முதுகுக்குப்
பின்னால் ஒருவேளை
பார்வை போனால்

சிவப்பு வர்ணம்பூசி
தோள்தொட நிற்கும்
எங்களூர்த் தபால்பெட்டி

எவர் பார்வைக்கும்
எளிதில் தட்டுப்படும்.

(  நன்றி : சொல்வனம் )