March 10, 2014

நள்ளிரவின் நீளம்

உறக்கம் கலைந்துவிட்டது
சன்னமாய் அதிரும் பேருந்து உடல்
என்ஜினின் சீரான குறட்டை ஒலி
வழியில் ஏனோ நின்றிருக்கிறது வண்டி.
நேரம்  நள்ளிரவை நெருங்கியிருக்கும்.

முன்னிரவில் 
தலையணையை நானெனத் தழுவியபடி 
என்வரவை எதிர்பார்த்து 
உறங்கச் சென்றிருப்பாய்.

இங்கே காலியாய்க் கிடக்கும்
ரெட்டை மெத்தையின் 
பக்கத்துப்  படுக்கையை 
வெறித்துக் கொண்டிருக்கிறேன்.

நள்ளிரவின் நீளத்தை 
கடக்கும் அவசியம் 
உனக்கில்லை.
எழுகையில் விடிந்திருக்கும்.
விழிவிரித்து நீ வியப்பைக்காட்ட 
என்னை அழைத்துவரும் 
நந்தியாவட்டம் பூத்த உன்வீட்டுவாசல்.

விடியலுக்கு முன்னால்
எஞ்சியுள்ள இரவு 
நீண்டு கிடக்கும் 
சாலை மீது
நின்றிருக்கும் பேருந்தினுள் 
ஆளற்ற படுக்கை மேல் 
புருவம்தீட்டி இமையிழுத்துப் பார்க்கிறேன்.
உன் நெற்றிமுடி அசைகிறது மேலே.
வளைத்து நெளித்து அழித்து 
எவ்வளவு முயன்றும் 
திருத்தமாய் எழவில்லை உன்னுடல்.
புரண்டு படுக்கிறேன்.
குளிரூட்டிய காற்றுதொட்டு சில்லிடுகிறது 
துணிவிலகிய என் முதுகு.
மல்லாந்து 
என்மேல் உனையிழுத்துப் போர்த்திக்கொள்கிறேன்.


பாதை தெளிந்து 
நகரத் துவங்கிவிட்டது பேருந்து.