March 25, 2015

வழிபாடு

ஆவணி அவிட்டம் 
புஷ்பம் வாங்கி 
அறுபடை முருகனுக்கு 
அர்ச்சனை பண்ணி 
வழிபாடு முடிக்கையில் 

அலை உருட்டும் 
கடல் மேலே 
கறுகறு என்று 
கனத்துத் தொங்கும் 
மேகம் விலக 
செம்மஞ்சளில் ஜொலித்த 
பூர்ண சந்திரனை 
கண்டு மலைத்து 
இருகரம் கூப்பி 
வணங்கி விட்டு 
வரும் வழியில் 
தூறல் வலுக்க 

அருகில் இருக்கும் 
அஷ்டலக்ஷ்மி கோயில் 
பந்தல் அடியே 
ஒதுங்கிய பாதங்களை 
எறும்பு கடிக்கவும் 

கோயிலுக்குள் நுழைந்து 
சாரல் தவிர்த்து 
இளைப்பாற அமர்கையில் 
மனதாரக் கும்பிட்டு 
மழை மெலிந்தவுடன் 
வெளியேறி

இரவுண்டி முடித்து 
திரும்பும் வழியிலும் 
துளிகள் தொடரவே 

வருண பகவானே 
வயிற்றில் இருக்கும் அப்புத்தங்கம் 
வீடுசேரும் வரைக்கும் பெய்யாதே 
உனக்கு கோடானுகோடி நன்றி 
என்று குட்டித்தங்கம் பிரார்த்தித்தாள் 

பெய்தாலும் 
சளிப் பிடிக்காத துளிகளாய் 
பார்த்துப் பெய் 
என்றொரு வரியை 
சேர்த்துச் சொன்னான் அப்புக்குட்டி.