முன்புறமோ அல்லது பின்புறமோ
அனாயசமாக ஒருகட்டம் தாண்டிவிடும்.
நிதானமாய்த் திரும்பிநின்று இளைப்பாறும்
குதிரை ஒரு வினோத விலங்கு.
ஆட்டத்தை வென்ற களிப்பில்
சதுரங்கப் பலகையை விட்டு
கனைத்து வெளியேறுகிறேன்.
ஓரடி பாய்ந்து
இடப்பக்கம் திரும்பினால் பரிதிப்பழம்.
இரவுவரைக்கும் காத்திருந்தால்
நிலவுக்கும் இது கதி.
எதிர்ப்படும் மாந்தர்
மரம் செடி யாவையும்
இரையாகப் பார்க்கும் கண்கள்
ஒளிர்ந்தவாறு நடக்கிறேன்.
அட! எதிரே வருகிறது அரேபிய குதிரை.
அண்டை நாட்டு அழகு ராணி.
கனைத்தவாறு
என்னுள் இருந்து குதித்து வெளியேறிய குதிரை
விரைகிறது அவளை நோக்கி.
மீதேறி போகிறதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.