May 04, 2011

பற்றில்லாமல் ஒரு கவிதை

எழுதலாம் 
பாலபாடமாய்
நான் என்ற சொல்லைத் தவிர்த்து.

 உருவத்திலும் உச்சரிப்பிலும் 
ஒற்றுமை இருப்பதால் 
தான் என்ற சொல்லையும்.
எளிதாகத் தான் தோன்றுகிறது 
அடடே தான் தோன்றிவிட்டதே
வார்த்தைகளுக்கா பஞ்சம்
மலிந்து கிடக்கின்றன மொழியில்
பற்றாக்குறைக்கு 
உற்பத்தியும் செய்து கொள்ளலாம்
அடுத்து
எனது எனக்கு ஒழிக்கலாம் 
எனது என்று எது இருக்கிறது
எனது என்று எதை கொண்டு வந்தாய் 
எனது என்று இருப்பது
எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எனக்கென்று எதுவும் வேண்டாம் 
ஏனென்றால்
எல்லாம் என்னிடம் இருக்கிறது
எல்லாமும் என்னிடம் இருப்பதால்
எனது என்று எதுவுமே இல்லை
என்னிடம் எல்லாம் தஞ்சம்
எனக்குள் எல்லாம் தங்கும்
எல்லாவற்றையும் சுமக்கும் 
பெருங்கருப்பையாய் 
கவிதையை கிடத்து
கண்ணீரில் கரைந்துபோகும் அது.