August 03, 2010

ஆணவம் கொள்

ஒற்றைக்கரம் இழந்தோர் இருகாலற்றவரைக் கண்டு ஆறுதல்கொண்டால், உறுப்புகள் உருப்படியாய் இருந்தும் மாமிசப்பிண்டமென மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் நரம்புநோயாளிகள் எவரிடமிருந்து ஆறுதல் பெறுவார்?

கடன்பட்டு குடித்தனம் செய்பவர் குடிசைவாழ்பவரைப் பார்த்து சமாதானம் கொண்டால் உண்டியுடுக்கையுறைவிடம் அற்ற அகதிகளை யார் சமாதானம் செய்வது?

ஒவ்வொரு உயிருக்கென்றும் ஒரு தனிச் சிறப்பு இருக்கக்கூடும். தனித்துவம் பெற்றதற்காக (வேண்டுமானால்) ஆணவம் கொள்ளலாம்.

தோற்ற மயக்கங்கள்
மேதா விலாசங்கள்
காசு கௌரவங்கள்

இன்னபிற நீங்கியும் -

ஆணவம் கொள்
நீ நீயாய் இருப்பதற்கு!

August 02, 2010

ரண்டக்க கவிஞர் ராஜா

மெட்டு: ARR ன் Airtel Tone
பாட்டு:

தேடும் கண்கள் எங்கேயோ பார்த்த பெண்ணைத்தான்
தேனிதழ் நீரோ மழைத்துளி தானோ
தெறிக்குது அருகே பேசுற கணம்
விழி குக்குறு குறு குக்குறு குறு
நோக்கியதோ.

மெட்டு: இளைய ராஜாவின் தென்பாண்டி சீமையிலே
பாட்டு: 1

மழை பேஞ்ச ஈரத்தில
மண் மேல வெரலிழுத்து
மனம் போல கிறுக்கியவ
பேரறிவாயோ ஊரறிவாயோ


இனிமேல் அவளை காண்பாயோ
கண்டால் எனக்கு சொல்வாயோ
மழையும் ஒருநாள் பொழியாதோ
மனசும் அதிலே நனையாதோ


பாட்டு: 2

சும்மாடு தலையில் வெச்சு
கருவாடு சுமக்கிறவ
தெருவோடு நடக்கையிலே
வீசுற வாசம் மல்லிகை வாசம்.

பாரா முகமா ஏன் போறே
காசா பணமா நான் தாரேன்
நீதான் எனக்கு சரி ஜோடி
ஊரு கிடக்கு அடி போடி.

மெட்டு: இளைய ராஜாவின் NOTHING BUT WIND
பாட்டு:

ஈரம் விழிகளில் வழியுது
கடும்பாறை நெஞ்சமிது கரையுது

மழைமேகம் நீலவானம் எனக்கானதே இனி
நெடுந்தூரம் போகவேணும் விளக்காகுமே விழி.

வலிக்காமல் பிரிகிறேன் வருகிறேன்.

குரு வணக்கம்

விளை நிலமென விளங்கி னேனெனிலும்
துளி ஈரமென பொழிந்த வானமே!
வானின்றி விளைந்த நிலமுண்டோ?
வான்நின்று வாழ்த்துவீர் எமையே!

August 01, 2010

முதல் கவிதை



பள்ளிப் பறவை


நானொரு பள்ளிப் பறவை
என் சிறகில் ஒரு கறை

( ஆறாம் வகுப்பில் கவிதை போட்டிக்காக எழுதியது. இரண்டு வரிகளைத் தாண்டி என் கற்பனை வரிக்குதிரை ஓடாது நொண்டியடித்து நின்றது. )

கோலங்கள்



அடர்பனி மார்கழி இரவில்
சுடர்விழியாள் தண்ணீர் தெளித்து
வாசலில் இயற்றிய கோலாகலம்
சங்க இலக்கியம்.

மஞ்சள் பூசிய முகத்தில்
வியர்வை வைத்த புள்ளிகளில்
நெற்றிமுடி ஆடும் கோலம்
புதுக் கவிதை.

ஒரு புள்ளி
ஒரு வரிசை எனினும்
விஜயலட்சுமி- ஹை கூ

பார்வைகள் பரிமாறும்போது
ரகசியமாய் நான் வைத்த புள்ளிகளில்
ரசல் போடும் கடலை
அலங்கோலம்.

( விஜயலட்சுமிக்கு நான் one way ல் பாதை போட்டுக் கொண்டிருக்கையில் நண்பன் ரசல் by- pass ல் குறுக்கிட்டான். )