மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு
கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள்
பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து.
விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள்.
நகங்களில்லை.
போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன்.
கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.
கரம் நுழைத்துத் துழாவியும்
அகப்படவில்லை.கடிக்கவுமில்லை.
இன்னமும் உயர்த்துகிறேன்.
உள்ளோடி ஒளிந்துகொள்கிறது.
சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும்.
விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும்.
சுவிட்சைத் தட்டியதும்
ஒளி குறைகிற இடங்களை நிறைத்தவாறு
என்னோடு சேர்த்து அறையையும் விழுங்க
போர்வைக்குள் இருந்து பூதாகரமாய் வெளிவருகிறது.