அழுத்திப் பூசிய அழுக்கும், பராமரிப்பில்லாத சரீரமாய் இவர்களைப் பார்த்திருக்கிறேன் . பொதுவான இடங்களில், பிரத்யேகமான உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள். பிரபஞ்சப் பெரும்புதிரை விடுவிக்கும் தீவிர சிந்தனையோடு வெறித்துப் பார்த்தபடியும், எள்ளி நகையாட ஒரு பெருங்கோமாளிஎன உலகத்தைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தபடியும் பார்வையில் பதியும் இவர்கள், மக்கள் தொகையில் விடுபட்ட எண்ணிக்கைகளோ . விதிஎனத் தீர்மானிக்கப்பட்ட கணத்தில் கவனந்தவறி, தடுக்கி விழுந்தவர்களோ ; விழுந்த பின் எழமுடியாமல் நின்றுவிட்டவர்களோ.